top of page

சூரரை போற்று பேசும் சட்டம்!

Writer's picture: Nirmalkumar Mohandoss & AssociatesNirmalkumar Mohandoss & Associates

"இத்திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு பின்னால் சில சட்ட நுணுக்கங்களின் தொடர்பிருப்பதை அறிந்து, அதில் சில சட்ட அம்சங்களை இக்கட்டுரையில் பதிவுசெய்ய விரும்புகிறோம்."


நிர்மல்குமார் மோகன்தாசு மற்றும் அக்‌ஷயா பெஞ்சமின்


இயக்குநர் சுதா படைப்பில், சூரியா நடித்து வெளியாகியுள்ள சூரரை போற்று திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சக்கைபோடு போட்டு கொண்டுள்ளது. இதனிடையில், படத்தில் வரும் சில காட்சிகள், மற்றும் வசனங்களுக்கு தொடர்புள்ள சில சட்டங்கள் பற்றி பொது மக்களுக்கு விளக்கலாம் என்ற சிந்தனை தான், இந்த கட்டுரை உருவாக முக்கியமான காரணம். ஆகவே, இது கருத்துருவாக்கும் கட்டுரை அல்ல என்பதை தெளிவு படுத்துகிறோம்.


வழக்குரைஞர்களான நாங்கள், இத்திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு பின்னால் சில சட்ட நுணுக்கங்களின் தொடர்பிருப்பதை அறிந்து, அதில் சில சட்ட அம்சங்களை பொது மக்களுக்கு படிக்க இலகுவாக இக்கட்டுரையில் பதிவுசெய்ய விரும்புகிறோம்.


1. DGCA:

திரைப்படத்தில், jaz விமான சேவை நிறுவனர், நெடுமாறனின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் DGCA. நெடுமாறன் தனது விமான சேவை நிறுவனத்தை தொடங்க அனுமதி கேட்டு DGCA அலுவலகத்தில் அலைவதும், பின்னர் ஒவ்வொரு கட்டத்திலும் அவரது முயற்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுமாக DGCA அலுவலக காட்சிகள் அமைந்திருக்கும். குறிப்பாக சில காட்சிகளில் ரத்தன் டாடாவை இருபது ஆண்டுகள் காக்கவைத்த அலுவலகம் DGCA என்ற வரலாற்றையும் வசனங்கள் மூலம் நினைவுபடுத்தி இருப்பார்கள்.


யார் இந்த DGCA?

Directorate General of Civil Aviation, அதாவது போக்குவரத்து விமான சேவை இயக்குனரகம், அதன் இயக்குனர் தலைமையில் இயங்குகிறது. இந்திய ஒன்றிய அரசால், இந்திய வானூர்திகள் சட்டத்தின் (Aircrafts Act, 1934) கீழ் அரசாணை மூலம் உருவாக்க பட்ட இந்த அமைப்பு, சமீபத்தில் வானூர்திகள் சட்ட திருத்தம் மூலம் பாராளுமன்ற சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பாக (statutory body) தகுதி உயர்வு பெற்றிருக்கிறது.


விமான சேவைகளுக்கு அனுமதி வழங்குவது, வானூர்தி தர நிர்ணயம் செய்வது, சர்வதேச விமானகட்டுபாட்டு அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பது, விமான பாதுகாப்பு கொள்கைகளை வரையறை செய்வது, விமானங்களுக்கு தர சான்று வழங்குவது, விமான விபத்துகளை விசாரிப்பது, விபத்துகளை தடுக்க வழிமுறைகளை இயற்றுவது போன்ற அதிகாரங்களை உள்ளடக்கிய அலுவலகம் தான் இந்த DGCA.


விதிகள் மற்றும் நெறிமுறைகளை இயற்றும் அதிகாரம்:

அதன் அதிகார வரம்பில் உள்ள அனைத்து விவகாரங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவோ, சட்டதிருத்ததை வலியுறுத்தியோ பரிந்துரை செய்யும் அதிகாரமும் DGCA'க்கு உள்ளது. மேலும், விமான போக்குவரத்து சம்பந்தமான விதிகள் மற்றும் நெறிமுறைகளை இயற்றும் அதிகாரம் படைத்த அலுவலகம் DGCA. அதனால் தான், குடியரசு தலைவரின் தலையீட்டால் அனுமதி வழங்கப்பட்ட பின்னர், நெடுமாறனின் விமானங்களை சிங்கப்பூரில் வெளி வடிவமைப்பு செய்து கொண்டிருக்கும் போது, "விமானத்தின் உள்வரைப்படத்தை (blueprint) விமான தயாரிப்பு நிறுவனம் வெளியிட வேண்டும்" என்று கடைசி நிமிடத்தில் விதிகள் இயற்றி, அதனால் தயாரிப்பு நிறுவனம் நெடுமாறனின் ஒப்பந்தத்தை அபராதத்துடன் ரத்து செய்வது போன்று காட்சி அமைத்திருப்பார்கள்.


"அந்த new bylaw'வ, அதாவது புது சட்டத்த போன வாரம் தான் போட்டோம், தெரியாதா?" மற்றும் "பணக்காரங்களுக்காக மட்டும் சட்டத்த மாத்தலாம், அப்படி தன சார்?" என்ற வசனங்களும் DGCA'வின் விதிகள் மற்றும் நெறிமுறைகளை இயற்றும் அதிகாரத்தை சம்பந்த படுத்தியே அமைந்திருக்கிறது.


விமான விபத்துகளை விசாரிக்கும் அதிகாரம்:

அதே போல், விமான போக்குவரத்து துறை அமைச்சர் பயணம் செய்யும், நெடுமாறனின் முதல் விமான சேவையில் தீ விபத்து ஏற்படுத்தி, அதனை DGCA'வால் விசாரிப்பதும் DGCA'வின் விமான விபத்துகளை விசாரிக்கும் அதிகாரத்தை சுட்டிக்காட்டியே காட்சி படுத்தபட்டிருக்கிறது. கடந்த 2011 ஆண்டில், இந்த அதிகாரம் DGCA'விடம் இருந்து பறிக்கப்பட்டு வானூர்தி விபத்துகள் புலனாய்வு அமைப்பிடம் (Aircraft Accidents Investigation Bureau) ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


விமானத்தின் பாதுகாப்பு தரநிலை:

விமானத்தின் பாதுகாப்பு தரநிலை DGCAவை பொறுத்தவரை மிக முக்கியம். ஒரு சரக்கு விமானம் மற்றும் பயணிகள் விமானத்தின் பாதுகாப்பு தரநிலைகள் முற்றிலும் வேறுபட்டவை. படத்தில் சரக்கு விமானங்களின் பாதுகாப்பு முக்கியத்துவத்தை பற்றி பரேஷ் கோஸ்வாமி கேள்வி எழுப்புவதை நாம் திரைப்படத்தில் காண்கிறோம். ஆக்ஸிஜன் முகமூடிகள், அவசரகால வெளியேற்றங்கள், கழிப்பறைகள் போன்ற சேவைகளை மனதில் கொண்டு சரக்கு விமானங்கள் உருவாக்கப்படாது. ஆனால் சரக்கு விமானங்களிலும் அவற்றை இணைப்பது சாத்தியம் தான்.


அதேபோன்று பழைய பயணிகள் விமானங்கள் சரக்கு விமானங்களாக மாற்றப்பட்டதற்கான பல எடுத்துக்காட்டுகளைப் நாம் பார்த்திருப்போம். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது கூட, பல பயணிகள் விமானங்கள் தற்காலிகமாக தங்கள் விமானங்களை சரக்கு விமானங்களாக மாற்றி அமைத்தன.


2. சுயமரியாதை/சீர்திருத்த திருமணம்:

நெடுமாறன் - சுந்தரி திருமணம், ஊர் பெரியோர் முன்னிலையில் மாலை மாற்றி நடைபெறும் சுயமரியாதை அல்லது சீர்திருத்த திருமணமாக காட்சி படுத்தபட்டிருந்தது. அத்தகைய திருமணத்தின் சட்டவடிவம் என்ன?


நம் நாட்டில் திருமணம், மகவேற்ப்பு (adoption), வாழ்க்கை பொருளுதவி (maintenance), காப்பான்மை (guardianship) முதலிய தனிமனித விவகாரங்களை நிர்வகிப்பது இனமுறை சட்டங்கள் (personal laws). உதாரணமாக இந்துக்களுக்கிடையே நடைபெறும் திருமணங்களை நிர்வகிப்பது Hindu marriages Act, 1955 அதாவது இந்து திருமண சட்டம்.


இச்சட்டத்தின் ஏழாம் விதியின்படி, இந்துக்கள் வழக்காற்று முறை சடங்குகளின்படி திருமணம் நடைபெறலாம்; அச்சடங்குகளில், சப்தபதி நடைமுறை அடக்கமாகும் நிலையில், மணமக்கள் தீயை சுற்றி ஏழாவது அடி வைத்தபின் திருமணம் முழுமை அடைந்த்ததாக கருதப்படும்.


இந்துக்களின் வழக்காற்று திருமண சடங்குகள் "சாதி/ பாலின ஏற்ற தாழ்வை ஆதரிக்கும் வேத, மனுதர்மங்களால் நிர்வகிக்கப்படுகிறது" என்ற திராவிடர் சிந்தனை எழுச்சி அடைந்த பின்பு, சுயமரியாதை அல்லது சீர்திருத்த திருமணம் என்னும் வேத சடங்குகளை நிராகரித்து, ஊர்/குடும்ப பெரியோர் முன்னிலையில் மாலை மாற்றி மணம் முடிக்கும் நடைமுறை சமூகத்தில் பிரபலம் அடைந்தது. ஆனால் அத்தகைய நடைமுறைக்கு வழக்காற்று சட்டங்களில் (customary law) இடம் இல்லாததால், அவை இந்து திருமண சட்டப்பிரிவு ஏழால் அங்கீகரிக்கப்படிகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. ஆகவே, தமிழகம் மற்றும் புதுவைக்கு பொருந்தும் பொருட்டு, இந்து திருமண சட்டத்தில் திருத்தம் செய்யபட்டு, பிரிவு 7A இணைக்கப்பட்டது. பிரிவு 7A, சுயமரியாதை/சீர்திருத்த திருமண முறையை அங்கீகரிக்கிறது.


3. போட்டி சட்டங்களும் நெடுமாறனின் தொழில் யுக்தியும்:


குறைந்த கட்டணத்துடன் குறைந்த கட்டண கேரியர் மற்றும் விரிவான பாதை நெட்வொர்க்கை வழங்குவதன் மூலம் ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைகளை வழங்குவது`தான் திரைப்படத்தின் கருத்து. தற்போதைய போட்டி வணிக சூழ்நிலையில் இதுபோன்ற ஒரு கருத்து சாத்தியமா? இது வணிக ரீதியாக லாபங்களை ஈட்டுமா? இது நம் நாட்டின் போட்டி சட்டங்களுக்கேற்ப (Competition laws) உள்ளதா? என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.


நம் நாட்டில் ஏகபோக மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளை தடுக்கும் நோக்கில் ஏகபோக மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகள் தடுப்பு சட்டம் (Monopolies & Restrictive Trade Practices Act, 1969) கடந்த 1969'ல் இயற்றப்பட்டது. மேலும் தொழில் நிறுவனங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் நோக்கில் கடந்த 2002'ஆம் ஆண்டு போட்டி சட்டம் (competition Act, 2002) இயற்றப்பட்டது. இந்த சட்டங்கள், நம் நாட்டின் தொழில் துறையை போட்டியுள்ளதாக மாற்றி, எந்த ஒரு பெரு நிறுவனமும் தங்களது ஆதிக்க நிலையை தவறாக பயன்படுத்தி மற்ற நிறுவனங்களை சந்தையில் இருந்து விரட்டி அடிக்காமல் பார்த்து கொள்கிறது. இயன்றவர் மற்றும் திறமையுள்ள எவரும் தொழில் சந்தையில் நுழைந்து போட்டி போடுவதால், வளங்கள் பல நிறுவனங்களுக்கு கிடைத்து நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதோடு, போட்டியின் பயன் நுகர்வோருக்கும் சென்றடைய உதவுகிறது.


தொழில் போட்டியை சூறையாடும் விலை நிர்ணயம் (predatory pricing):

இந்த போட்டி சட்டத்தின் அடிப்படையில், சந்தையில் போட்டியிடும் ஒரு தொழில் நிறுவனம், தங்களது சேவையின் விலையை அதீதமாக குறைத்து போட்டியில் உள்ள மற்ற நிறுவனங்களை இழப்பில் ஆழ்த்தி அவைகளை சந்தையிலிருந்து வெளியேறுவதை தடுக்கிறது.


அதனால் தான் இத்தகைய குறைந்த கட்டண விமானங்களை வழங்க செலவுகள் எவ்வாறெல்லாம் குறைக்கப்பட்டன என பல வழிகளை படம் காட்டுகிறது. இதில் குறிப்பிட்ட சில சரக்கு விமானங்களை குத்தகைக்கு எடுத்து அவற்றை பயணிகள் விமானங்களாக மாற்றுவதன் மூலம், நடுத்தர மனிதர்களின் பங்கைக் குறைப்பதன் மூலமும், பயணிகளை ஆன்லைனில் நேரடியாக முன்பதிவு செய்ய அனுமதிப்பதன் மூலமும், ஓய்வுபெற்ற விமானப்படை வீரர்களை விமானிகளாகப் பயன்படுத்துவதன் மூலம் போன்றவை ஆகும்.


சரக்கு விமானங்களுக்கும் பயணிகள் விமானத்திற்கும் உள்ள மற்றொரு முக்கிய வேறுபாடு எரிபொருள் செயல்திறன் (fuel efficiency) ஆகும். அவைகள் நாள் ஒன்றுக்கு அதிக பயணத்தை மேற்கொள்ளலாம் இதனால் எரிபொருள் செயல்திறன் அதிகரிக்கும். இதனால் ஒரு பயணத்தின் ஒட்டுமொத்த செலவு குறைகிறது. இந்த நன்மை வாடிக்கையாளருக்கு செல்கிறது. இது சட்டத்திற்கு உட்பட்டதாகும். மற்றும் பயணிகள் விமானங்களுக்கு பொதுவாகப் பெரிய பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் இது சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது.


மேலும், சரக்கு விமானங்களின் ஓடுபாதை (runway) தேவை, பயணிகள் விமானத்தை விட குறைவாகவே இருக்கும், இதனால் சிறிய ஓடுபாதையிலும் விமானத்தை கட்சிதமாக இறக்க முடியும். படத்தில் நெடுமாறன், விமான போக்குவரத்துத்துறை அமைச்சரிடம், "சார் உங்க தொகுதிலயும் ரெண்டு ஏர் ஸ்ட்ரிப் இருக்கு, நாட்லயே குறைவான விலைல flight'a கொண்டு போய் அங்க இறக்குனீங்கனா எப்படி ஒரு impact இருக்கும்!." என்று கூறுவதின் காரணமும் இதுவே.



போட்டிமுடக்க ஒப்பந்தம்:

பொதுவாக வணிகத்தில், நிறுவனங்கள் ஒரு கார்டெல் (cartel) அமைத்து கூட்டாக கட்டணங்களை அதிகரிக்கும்., இது கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகள் (restrictive trade practices) ஆகும். அப்படிப்பட்ட கூட்டு நடவடிக்கை, போட்டி சட்டம் பிரிவு மூன்றால் 'போட்டிமுடக்க ஒப்பந்தமாக' (anti-competitive agreement) கருதி, அதனை தடை செய்கிறது. படத்தில் பாலையாவிற்கு தனது நிறுவனத்தை விற்காமல் இந்த முறைகேட்டை தவிர்க்கிறார் நெடுமாறன்.


டைனமிக் கட்டணம் விலை நிர்ணயம்:

திரைப்படத்தில், ஹீரோ ஒரு ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக காட்டப்படுகிறது. இது டைனமிக் கட்டணம் விலை நிர்ணயம் (dynamic fare pricing) என்று அழைக்கப்படும் ஒரு கருத்து. கட்டண முன்பதிவின் பொழுது, தொடக்க நேரத்தில் கட்டணதின் விலை ஒரு அடிப்படை கட்டணமாகவும், நேரம் செல்ல செல்ல விகிதங்கள் படிப்படியாக அதிகரிக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இருக்கைகளின் எண்ணிக்கை குறையும் போது விலை அதிகரிக்கிறது, எனவே தேவை அதிகமாக இருக்கும்போது விலையும் அதிகமாக இருக்கும். இது தொழில் போட்டியை சூறையாடும் விலை நிர்ணயம் ஆகாது (predatory pricing) என்று நம் நாட்டின் போட்டி ஆணையம் (competition commission) கருத்து தெரிவித்துள்ளது. இதே முறையை விமானத் துறையைச் சேர்ந்த பலர் பயன்படுத்துகின்றனர், பின்னர் இது இந்திய ரயில்வேயால் பல ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும் மற்ற விமானங்களில் தரப்படும் ஆடம்பரங்களை ஏர் டெக்கான் வழங்காததால் இது மற்ற விமான நிறுவனங்களுடன் போட்டியிடாமல் இந்தியன் ரைல்வேசுடன் போட்டி இடுகிறது.

"என்னோட போட்டி இந்தியன் அயர்வேஸ் இல்ல சார், இந்தியன் ரைல்வேஸ்", என்ற வசனம் நினைவிருக்கிறதா?


திரைக்கதை மற்றும் வசனங்களுக்கு பின்னால் இவ்வளவு சட்டங்கள் ஊடுருவி இருப்பதை பார்த்தால் வியப்பாக இருக்கிறதா? பிறப்பில் இருந்து இறப்பையும் தாண்டி, மனித வாழ்க்கையில் சட்டம் ஒரு முக்கிய அங்கமாகவே திகழ்கிறது!




(The authors, our founder NIRMALKUMAR MOHANDOSS & our Corporate Laws Associate AKSHAYAA BENJAMIN are available for comments and feedback. AKSHAYAA is also an independent practitioner at the Madras High Court.


You can reach us for comments & at nirmalkumar.m.law@gmail.com)


Comments


DISCLAIMER: IN COMPLIANCE WITH BAR COUNCIL REGULATIONS, WE DO NOT SOLICIT CLIENTS. THIS WEBSITE IS ONLY INTENDED FOR SHARING OF INFORMATION & KNOWLEDGE. VISITING THIS PAGE IS OUT OF YOUR OWN VOLITION.

Contact us at

 

E-mail: nirmalkumar.m.law@gmail.com                                              

 

Chennai: No. 12/76A, G-Block, 12th Street, 1st lane Anna Nagar East, Chennai - 600102.

Pondicherry: No. 103, La Porte Street, Puducherry - 605001.

  • LinkedIn
  • Facebook
  • Twitter

© 2023 by Train of Thoughts. Proudly created with Wix.com

bottom of page